அடேங்கப்பா..! அடித்து நொறுக்கும் ரிலையன்ஸ் ஜியோ சேவை: இதோ முழுவிவரம்
ரிலையன்ஸ் நிறுவனத்தில் ஆண்டு பொதுக் கூட்டம் மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரிலையன்ஸ் ஜியோ 4ஜி மொபைல் சேவை குறித்த முக்கிய அம்சங்கள் அறிவிக்கப்பட்டன.
இதில் இந்த ஆண்டு டிசம்பர் இறுதிவரை, அழைப்புகள் அனைத்தும் இலவசம், இணையதள சேவைக்கான கட்டணம் உலகிலேயே மிகவும் குறைவு உள்ளிட்ட பல ஜியோ சேவையை பற்றி முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
மும்பையில் இன்று நிருபர்களிடம் பேசிய முகேஷ் அம்பானி, “தற்போது ரிலையன்ஸ் நிறுவனத்தில் 60 ஆயிரம் பேர் பணியாற்றுகிறார்கள். ஜியோ முழுக்க இளைஞர்களுக்காக கொண்டுவரப்பட்டுள்ளது.
பிற நெட்வொர்க்குகளை ஒப்பிட்டால் 10ல் ஒரு பங்கு குறைந்த கட்டணத்தில் இணையதள சேவையை வழங்க உள்ளோம். அதாவது ஜியோ ஒரு எம்பிக்கு வெறும் 5 பைசாவைத்தான் வசூலிக்க உள்ளது.
அதாவது ஒரு ஜிபி டேட்டாவுக்கு ரூ. 50 மட்டுமே. இந்த கட்டணம் ரூ. 25 என்ற அளவில் கூட குறையலாம்” என்று கூறியுள்ளார்.
ரிலையன்ஸ் ஜியோவின் அம்சங்கள்
- இந்தியா முழுவதும் இலவச மொபைல் அழைப்புகள்.
- ரோமிங் கட்டணம் கிடையாது.
- 4ஜி இணையத்தில் 1 ஜிபி டேட்டா வெறும் ரூ. 50 கட்டணம் மட்டுமே.
- மாணவர்களுக்கு இலவசமாக 25 சதவிதம் கூடுதல் இணைய பயன்பாடு.
- முதல் 4 மாதங்களுக்கு இலவச இணைய பயன்பாடு.
- குறைந்த தொகையாக ரூ. 19ல் இருந்து மொபைல் திட்டங்கள்.
- குறைவாக இணையம் பயன்படுத்துவோருக்கு அடிப்படை திட்டம் மாதத்துக்கு ரூ. 149, அதிக அளவு உபயோகிப்போருக்கு ரூ. 4,999 வரை.
- ரிலையன்ஸின் ‘லைஃப்’ பிராண்ட் மொபைல்கள் ரூ.2,999ல் இருந்து கிடைக்கும்.
செப்டம்பர் 5ம் திகதி, விநாயகர் சதுர்த்தி முதல் ஜியோ சேவை நாடு முழுக்க கிடைக்க உள்ளது. அதன் பிறகு இந்தியா முழுமையாக மாற உள்ளதாக முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்புகள் மற்ற மொபைல் வாடிக்கையாளர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.