அசத்திய பெய்லி: 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா
இலங்கை- அவுஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி தம்புல்லாவில் நடந்து முடிந்துள்ளது.
இதில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு தொடக்க வீரர் குணத்திலக (5) நிலைக்கவில்லை. அடுத்து வந்த மெண்டிஸ் (4) வந்த வேகத்தில் கிளம்பினார்.
நிதானமாக ஆடி வந்த டில்ஷான் 42 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இது அவருக்கு கடைசி ஒருநாள் போட்டியாகும். மறுமுனையில் அசத்தி வந்த சந்திமால் நிதானமாக ஓட்டங்கள் குவிப்பில் ஈடுபட்டார்.
இருப்பினும் அணித்தலைவர் மேத்யூஸ் (2), தனன்ஜெய டி சில்வா (12), குஷால் (11), திசர பெரேரா (9) என அடுத்து வந்தவர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். தில்ருவான் 17 ஓட்டங்கள் எடுத்தார்.
துணைத்தலைவர் சந்திமால் நிதானமாக ஆடி சதம் அடித்தார். அவர் 130 பந்தில் 102 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதனால் 49.2 ஓவரில் இலங்கை 226 ஓட்டங்கள் எடுத்திருந்த போது அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
அவுஸ்திரேலிய அணி சார்பில், ஸ்டார்க், ஹஸ்டிங்ஸ், பால்க்னர் தலா 2 விக்கெட்டுகளும், ஆடம் சம்பா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள்.
இதனையடுத்து 227 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அவுஸ்திரேலியா அணி களமிறங்கியது. துவக்க வீரர்களாக வார்னர் மற்றும் பின்ச் ஆகியோர் களமிறங்கி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
12 பந்துகளை சந்தித்த வார்னர்(10) மாத்யூஸ் பந்தில் வெளியேறினார். தொடர்ந்து மார்ஷ்(1) எட்டு பந்துகளை மட்டும் சந்தித்து வெளியேற அவுஸ்திரேலியா ஓட்டங்கள் குவிக்க முடியாமல் தடுமாறியது.
இதனிடையே பின்சுடன் ஜோடி சேர்ந்த பெய்லி சூழலுக்கு ஏற்றவாறு அதிரடி காட்டினார். 99 பந்துகளை சந்தித்த அவர் 70 ஓட்டங்கள் குவித்து பிரசன்னாவின் பந்தில் வெளியேறினார்.
தொடர்ந்து வந்த ஹீட்(36), வேட்(42) ஆகியோர் மட்டுமே சுமாராக விளையாடினர். இதனையடுத்து 46 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 227 ஓட்டங்கள் குவித்து அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது.
5 ஆட்டங்கள் கொண்ட இந்த தொடரில் 2-1 என்ற புள்ளிக் கணக்கில் அவுஸ்திரேலிய அணி முன்னிலை பெற்றுள்ளது.