கத்தார், லுசெய்ல் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (19) நடைபெற்ற அங்குரார்ப்பண FIFA கண்டங்களுக்கு இடையிலான கிண்ண (கழகமட்டம்) கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் மெக்சிகோவின் க்ளப் டி புட்போல் பச்சுகா கழகத்தை 3 – 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி கொண்ட ஸ்பெய்னின் ரியல் மெட்றிக் கழகம் சம்பியானது.
15 தடவைகள் ஐரோப்பிய சம்பியனான ரியல் மெட்றிக் கழகத்தின் பலத்திற்கு பச்சுகா கழகத்தினால் ஈடுகொடுக்க முடியவில்லை.
இந்த இறுதிப் போட்டி முழுவதும் ஆதிக்கம் செலுத்திய ரியல் மெட்றிட் 37ஆவது நிமிடத்தில் எம்பாப்பே மூலம் முதலாவது கோலைப் போட்டு முன்னிலை அடைந்தது.
வருடத்தின் அதிசிறந்த பீபா வீரராகத் தெரிவான வினிசியஸ் ஜூனியர் முதலாவது கோல் போடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார்.
இடைவேளையின் பின்னர் 53ஆவது நிமிடத்தில் ரியல் மெட்றிடின் 2ஆவது கோலை ரொட்றிகோ போட்டார்.
தொடர்ந்து 84ஆவது நிமிடத்தில் பெனல்டி கோல் ஒன்றை வினிசியஸ் ஜூனியர் போட ரியல் மெட்றிட் 3 – 0 என வெற்றிபெற்று சம்பியனனாது.
போட்டி நடைபெறும் விதம்
ஒவ்வொரு கண்டத்திலும் நடத்தப்படும் பிரதான போட்டிகளில் சம்பயினாகும் கழகங்கள் கண்டங்களுக்கு இடையிலான கால்பந்தாட்ட கிண்ணப் போட்டியில் பங்குபற்ற தகுதிபெறும்.
கண்டங்களுக்கு இடையிலான கிண்ணப் போட்டி முதல் தடவையாக இந்த வருடம் நடத்தப்பட்டது.
இதற்கு அமைய ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் சம்பியன் ரியல் மெட்றிட், ஆபிரிக்க சம்பியன்ஸ் லீக் சம்பியன் அல் அஹ்லி, வடக்கு, மத்திய அமெரிக்க மற்றும் கரிபியன் சம்பியன்ஸ் கிண்ண சம்பியன் பச்சுகா, தென் அமெரிக்க பிறீமியர் சம்பியன் பொட்டாஃபோகோ, ஆசிய சம்பியன்ஸ் லீக் சம்பியன் அல் அய்ன், கடல்சூழ் பிராந்திய சம்பியன்ஸ் லீக் சம்பியன் ஓக்லண்ட் சிட்டி ஆகிய கழகங்கள் கண்டங்களுக்கு இடையிலான கால்பந்தாட்ட நொக் அவுட் போட்டியில் விளையாட தகுதி பெற்றிருந்தன.
ரியல் மெட்றிட் நேரடியாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றதுடன் அல் அஹ்லி, பச்சுகா, பொட்டாஃபோகோ ஆகிய கழங்கள் நேரடியாக இரண்டாம் சுற்றிலும் அல் அய்ன், ஓக்லண்ட் சிட்டி ஆகிய கழங்கள் முதல் சுற்றிலும் விளையாடின.
அமெரிக்காக்களுக்கு இடையிலான 2ஆம் சுற்றுப் போட்டியில் போட்டாஃபோகோவை 3 – 0 எனவும் சவால் கிண்ண 3ஆம் சுற்றுப் போட்டியில் அல் அஹ்லியை 6 – 5 என்ற பெனல்டி முறையில் பச்சுகா வெற்றிகொண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தது.