தயாரிப்பு : வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் & வாம் இந்தியா
நடிகர்கள்: ஜீவா, அர்ஜுன், ராசி கண்ணா, ராதாரவி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, எட்வர்ட் சொனன்பிளேக் மற்றும் பலர்.
இயக்கம் : பா. விஜய்.
மதிப்பீடு : 2 / 5
ஹாரர் ஃபேண்டஸி திரைப்படம் என வெளியீட்டிற்கு முன்னர் படக்குழுவினர் ‘அகத்தியா’ படத்தை பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்திருந்தனர். இந்நிலையில் இப்படம் ரசிகர்களுக்கு திருப்தியை அளித்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
அகத்தியன் ( ஜீவா) திரைப்படத் துறையில் கலை இயக்குநராக பணியாற்ற விரும்புகிறார். இதற்காக அவர் அறிமுகமாகும் முதல் திரைப்படத்திற்காக லட்சக்கணக்கில் செலவழித்து பிரம்மாண்டமான அரங்கம் ஒன்றை வடிவமைக்கிறார். அந்த அரங்கத்தில் படப்பிடிப்பு நடைபெறாமல் படத்தின் பணிகள் தடை ஏற்படுகிறது. இதனால் அகத்தியன் மனதளவில் சோர்வடைய, அவருடைய உதவியாளராக இருக்கும் வீணா ( ராஷி கண்ணா) இந்த அரங்கத்தை மக்கள் அனைவரும் வந்து செல்லும் வகையில் ஸ்கேரி ஹவுஸ் ஆக மாற்றி வடிவமைக்கலாம் என சொல்கிறார்.
வீணாவின் ஐடியா நன்றாக இருக்க அகத்தியன் அதனை ஸ்கேரி ஹவுஸ் ஆக மாற்ற.. மக்களின் ஆதரவு பெருக அங்கு சில அமானுஷ்யமான சம்பவங்கள் நடைபெறுகிறது. அந்தத் தருணத்தில் அகத்தியனுக்கு அங்கிருந்து ஒரு பழங்கால படச்சுருள் பெட்டி கிடைக்கிறது.
அதில் சித்த மருத்துவர் சித்தார்த்தன் ( அர்ஜுன் ) தோன்றி, தமிழில் சித்த மருத்துவத்தை பற்றிய அரிய குறிப்புகளை காட்சி வழியாக ஆவண படுத்தி இருக்கிறார். அவர் 1940 ஆம் ஆண்டில் பிரெஞ்சு மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்ட புதுச்சேரியில் அப்போதைய ஆளுநரின் தங்கைக்கு சித்த வைத்திய சிகிச்சை அளிக்க ஒப்புக்கொள்கிறார். அத்துடன் அரிய வகையினதான புற்று நோயை குணப்படுத்துவதற்கான மருந்தையும் கண்டறிகிறார். ஆனால் பேராசை பிடித்த பிரெஞ்சு ஆளுநர் சித்த மருத்துவரான சித்தார்த்தன் மீது கோபம் கொள்கிறார்.
அதன் பிறகு சித்த மருத்துவர் சித்தார்த்தனுக்கு 1940இல் என்ன நடந்தது? என்பதனை அறிந்து கொள்வதில் அகத்தியன் ஆர்வம் காட்டுகிறார் . அத்துடன் ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் தன் தாயை சித்த மருத்துவ சிகிச்சை மூலம் காப்பாற்ற இயலும் என்றும் நம்புகிறார். அவரின் முயற்சியில் அவர் வெற்றி பெற்றாரா? இல்லையா? இதற்கு தடையாக இருந்தது எது? அதனை எப்படியாவது வெற்றி கொண்டார்? என்பதுதான் இப்படத்தின் கதை.
ஜீவா நீண்ட வருடத்திற்கு பிறகு வித்தியாசமான அகத்தியன் எனும் திரைப்பட கலை இயக்குநர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதற்காக அவர் அதிகம் மெனக்கடவில்லை என்பதும் புரிகிறது. ஆனால் சுதந்திரப் போராட்ட தியாகி வேடத்தில் நடித்திருப்பதும் , அதற்காக பிரத்யேக வேடத்தில் தோன்றுவதும் சிறப்பு. அம்மா சென்டிமென்ட் தொடர்பான கட்சிகளில் இவரை விட , இவரது அம்மாவாக நடித்திருக்கும் ரோகிணியின் நடிப்பும், தோற்றமும் கவனம் ஈர்க்கிறது.
சித்த மருத்துவர் சித்தார்த்தன் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அர்ஜுன் வழக்கம் போல் அலட்டல் இல்லாத அழுத்தமான வேடத்தில் நடித்து தன் பங்களிப்பை நிறைவு செய்து இருக்கிறார்.
எட்வின் டூப்ளெக்ஸ் எனும் பிரெஞ்சு ஆளுநராக நடித்திருக்கும் நடிகர் எட்வர்ட் சொனன்பிளேக் வழக்கமான வில்லனாக நடித்திருக்கிறார்.
வீணா என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராசி கண்ணா குறைவான காட்சிகளில் மட்டுமே தோன்றுகிறார்.
1940 மற்றும் தற்போதைய காலகட்டம் என இரண்டு காலகட்டங்களில் மாறி பயணிக்கும் திரைக்கதைக்கு ஏற்ப ஒளிப்பதிவு மற்றும் வி எஃப் எக்ஸ் காட்சிகள் பிரமிப்பாகவும், தரமாகவும் அமைந்திருக்கிறது. குறிப்பாக இப்படத்தின் உச்சகட்ட காட்சி-
லாஜிக் மீறல் இருந்தாலும் தமிழர்களின் பாரம்பரியமான சித்த மருத்துவம் தொடர்பான படைப்பு என்பதால் இயக்குநரை தாராளமாக பாராட்டலாம்.
அதிலும் குறிப்பாக மதம் கொண்ட யானையை அடக்குவதற்கும் சித்த மருத்துவ வேர் இருக்கிறது என குறிப்பிட்டிருப்பது பாராட்டுக்குரியது.
1940 கலை திரையில் காண்பிக்கும் போது ‘குடியரசு’, ‘திராவிடன்’, போன்ற நாளிதழ்களையும், பாரதிதாசன் – இரட்டைமலை சீனிவாசன்- அம்பேத்கார் – போன்ற சுதந்திர போராட்ட வீரர்களின் குறிப்புகளும் இடம்பெற வைத்திருப்பது தனி சிறப்பு.
இளையராஜாவின் எவர்கிரீன் கிளாஸிக் பாடலான ‘என் இனிய பொன் நிலாவே..’ பாடலை ரீமிக்ஸ் செய்திருக்கிறார்கள். ஒரிஜினலை இந்த புதுப்பிப்பு வெற்றி கொள்ளவில்லை என்றே சொல்லலாம்.
கதையாக கேட்கும் போது இருக்கும் சுவாரசியம் காட்சிப்படுத்துதலின் போதாமையால் மனநிறைவு ஏற்படாமல் இருக்கிறது. படத்தின் உச்சகட்ட காட்சிக்காக உழைத்தது போல்.. படம் முழுவதும் உழைத்திருந்தால்.. பெரிய வெற்றியை பெற்றிருக்கும்.
அகத்தியா – பயமுறுத்தாத கிராஃபிக்ஸ் பேய்