தயாரிப்பு : யு கே கிரியேஷன்ஸ்
நடிகர்கள் : உதய் கார்த்திக், சுபிக்ஷா காயரோகனம், விவேக் பிரசன்னா, பார்த்திபன் குமார், ஸ்ரீஜா ரவி, மோகன சுந்தரம், சந்தோஷ் மற்றும் பலர்.
இயக்கம் : செல்வகுமார் திருமாறன்
மதிப்பீடு : 2.5/5
தமிழ் திரையுலகில் திரைப்பட துறை சார்ந்த கதாபாத்திரங்கள் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் திரைப்படங்கள் வசூல் ரீதியாக பாரிய வெற்றியை பெறுவதில்லை என்ற சென்டிமென்ட் உள்ளது. இந்த நிலையில் ஃபேமிலி படம் எனும் திரைப்படம் திரைப்படத் துறையில் பணியாற்றும் நாயகனின் வாழ்வியலை பேசுகிறது. இதனால் இந்த திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
கதையின் நாயகனான தமிழ் ( உதய் கார்த்திக்) க்கு இரண்டு மூத்த சகோதரர்கள் ( விவேக் பிரசன்னா- பார்த்திபன் குமார்) தாய் ( ஸ்ரீஜா ரவி) தந்தை ( அரவிந்த் ஜானகிராமன்) அம்மப்பா – தாத்தா( மோகனசுந்தரம்) அண்ணி மற்றும் பிள்ளைகளுடன் சென்னையில் வாழ்கிறார்.
இவர் குறும்படம் ஒன்றை இயக்கி, பாராட்டை பெற்றிருக்கிறார். அதனைத் தொடர்ந்து திரைப்படம் ஒன்றை இயக்குவதற்காக கதை எழுதி, இயக்குநராவதற்காக ஒவ்வொரு தயாரிப்பாளர்களை சந்தித்து வாய்ப்பு கேட்டு வருகிறார்.
தொடர் அவமானங்களை சந்திக்கும் தமிழுக்கு மதுரையிலிருந்து யமுனா என்ற ஒரு இளம் பெண், ‘உங்களுடைய குறும்படத்தை பார்த்தேன். நன்றாக இருக்கிறது’ என சமூக வலைதளம் மூலமாக பாராட்டு தெரிவிக்கிறார்.
இதனால் நம்பிக்கையும், உற்சாகமும் அடையும் தமிழ் – மதுரையில் இருக்கும் யமுனாவை சந்திக்க விருப்பம் கொள்கிறார்.
அதே தருணத்தில் யமுனாவின் பாராட்டு கிடைத்த பிறகு அவருக்கு தயாரிப்பாளர் ஒருவர் வாய்ப்பு தருவதற்கு சம்மதிக்கிறார். இதற்காக மதுரையில் படப்பிடிப்பில் இருக்கும் உச்ச நட்சத்திரம் ஒருவரை சந்தித்து கதையை விவரிப்பதற்காக தயாரிப்பாளரும், தமிழும் மதுரைக்கு வருகை தருகிறார்கள்.
உச்ச நட்சத்திரத்தை தயாரிப்பாளர் துணையுடன் சந்திக்கும் தமிழ் விவரிக்கும் கதை அவருக்கு பிடிக்கிறது. இருந்தாலும் ஒரு இடையூறு உண்டாகிறது. இதனைத் தொடர்ந்து தமிழின் கதையும் திருடப்படுகிறது. தன்னுடைய வாய்ப்பு தன் கண்ணெதிரே பறி கொடுத்ததை நினைத்து மனம் உடைந்து போகிறார்.
இந்தத் தருணத்தில் தமிழின் லட்சியக் கனவை அவருடைய குடும்ப உறுப்பினர்கள் உணர்ந்து நிறைவேற்ற திட்டமிடுகிறார்கள். அவர்களுடைய திட்டம் வெற்றி பெற்றதா? இல்லையா?தமிழ் இயக்குநராக வெற்றி பெற்றாரா ? இல்லையா? என்பதை விவரிப்பதுதான் இப்படத்தின் கதை.
கடந்த தசாப்தங்களில் சினிமாவில் வெற்றி பெறும் இளைஞர்களுக்கு அவர்களது குடும்பம் ஒருபோதும் ஆதரவாக அக்கறையாக நடந்து கொண்டதில்லை என்ற பிம்பத்தை பார்வையாளர்களிடத்தில் படைப்பாளிகள் உருவாக்கியிருந்தார்கள்.
அதனை இப்படத்தின் அறிமுக இயக்குநர் உடைத்தெறிந்திருக்கிறார். படைப்பாளியின் லட்சியத்தை அவரது குடும்ப உறுப்பினர்கள் முழுமையாக உணர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என என்பதை அழுத்தந்திருத்தமாகவும், உணர்வுபூர்வமாகவும், யதார்த்தமாகவும் விவரித்திருக்கிறார்.
இதற்காக காட்சிகளை பார்வையாளர்களின் ரசனைக்கு ஏற்ப திரை மொழி மற்றும் காட்சி மொழியுடன் விவரித்திருப்பது தான் இப்படத்தின் பலம். படத்தின் முதல் பாதியில் தியேட்டரிக்கல் மொமன்ட் என்பது இல்லை என்றாலும் இரண்டாம் பாதியில் ரசிகர்களை கதையுடன் அழைத்துச் சென்றது இயக்குநருக்கு கிடைத்த வெற்றி.
இதனை உணர்ந்து படத்தில் நடித்திருக்கும் நடிகர்களும் , பணியாற்றியிருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களும் உழைத்திருப்பது படத்தை ரசிக்க வைக்கிறது.
கதையின் நாயகன் தமிழ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் உதய் கார்த்திக் – ஏற்கனவே ‘டை நோ சர்ஸ்’ எனும் படத்தில் தன் திறமையை நிரூபித்திருக்கிறார். இந்தப் படத்திலும் உதவி இயக்குநராக அவமானங்களை சந்திக்கும் இடத்திலும் படத்தின் இயக்கும் வாய்ப்பை பெற்றபோது மகிழ்ச்சியையும் தன் கதை திருடப்பட்டபோது இயலாமையையும் அற்புதமாக வெளிப்படுத்தி தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.
தொடர்ந்து முயற்சி செய்தால் தமிழ் சினிமாவில் சிறந்த இடத்தை பெற முடியும்.
யமுனா எனும் கதாபாத்திரத்தில் தோன்றியிருக்கும் நடிகை சுபிக்ஷா இயல்பான கதாபாத்திரத்தை தன்னுடைய திறமையான நடிப்பால் வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதிற்குள் இடம் பிடிக்கிறார்.
இவர்களைக் கடந்து நாயகன் தமிழின் மூத்த சகோதரர் சரத்குமார் எனும் வேடத்தில் நடித்திருக்கும் விவேக் பிரசன்னா- நன்றாக நடித்து கவனம் பெறுகிறார்.
தமிழில் இரண்டாவது சகோதரராக நடித்திருக்கும் பார்த்திபன் குமாரின் நடிப்பும் பரவாயில்லை ரகம்.
படத்திற்கு பாடல்கள் சிறப்பாக இல்லை என்றாலும் படத்தின் கதை ஓட்டத்திற்கு தடையாக இல்லாமல் இருப்பதே சுகம். பின்னணி இசையும், ஒளிப்பதிவும் இயக்குநருக்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது.
ஃபேமிலி படம் – ஃபேமிலியுடன் பார்க்கலாம்.