வவுனியா – மதகுவைத்தகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படும் பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் எவ்வித வெளிப்படைத் தன்மையும் காணப்படவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
வட மாகாணத்திற்கான உத்தேச பொருளாதார மத்திய நிலையம் அமைய வேண்டிய இடம் தொடர்பில், பல்வேறு கருத்து முரண்பாடுகள் மக்கள் பிரதிநிதிகள் இடையில் எழுந்தன.
பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தை பகுதியிலேயே அமைக்கப்பட வேண்டுமென வட மாகாண முதலமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், விவசாய அமைப்புக்களின் பிரநிதிகள் மற்றும் புத்திஜீவிகள் வலியுறுத்தியிருந்தனர் .
பொருளாதார மத்திய நிலையத்திற்காக பிரேரிக்கப்படும் ஓமந்தை மற்றும் தாண்டிக்குளம் காணிகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சிலர் கடந்த வருடம் ஜூலை மாதம் சென்று பார்வையிட்டனர் .
ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பதற்கான காணியை பெற்றுக் கொள்வதில் எவ்வித சிக்கலும் ஏற்படாது என இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக செயற்பட்ட பி.எஸ்.எம்.சாள்ஸ் குறிப்பிட்டிருந்தார்.
வட மாகாணத்திற்கான உத்தேச பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைப்பதற்கு, 2010ஆம் ஆண்டு நடைபெற்ற வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தின் போது,தீர்மானிக்கப்பட்டது.
எனினும் மதகுவைத்த குளம் பகுதியில் பொருளாதார மத்திய நிலையத்தின் நிர்மாணப்பணிகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன.
மதகுவைத்தகுளத்தில் இரண்டரை ஏக்கர் நிலப்பரப்பில் வௌிப்படைத்தன்மையற்ற விதத்தில் நிர்மாணப்பணிகள் இடம்பெற்றுவருவதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.
வௌிப்படைத்தன்மையற்ற விதத்தில் இடம்பெற்றுவரும் பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக வவுனியா மாவட்ட செயலாளரை தொடர்புகொள்ள மேற்கொண்ட முயற்சி பயனலிக்கவில்லை.