ரோலர் கோஸ்டர் விபத்து: காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 11 பேர்.
ஸ்காட்லாந்தில் அமைந்துள்ள தீம் பார்க் ஒன்றில் ரோலர் கோஸ்டர் விபத்துக்குள்ளானதில் அதிர்ஷ்டவசமாக 11 பேர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
ஸ்காட்லாந்தின் வடக்கு லனார்க்ஷையர் பகுதியில் அமைந்துள்ள M&D தீம் பார்க்கில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
Tsunami roller coaster என பெயரிடப்பட்டுள்ள இந்த விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் 9 சிறுவர்களும் 2 வயது முதிர்ந்தவர்களும் காயமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
விபத்தினையடுத்து சம்பவம் நடந்த பகுதிக்கு 6 அவசர ஊர்திகளும் 6 தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினரும் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
விபத்தில் காயமடைந்த இளைஞர் ஒருவரும், சிறுவனும் ஆபத்து கட்டத்தை கடந்துள்ளதாகவும், 3 சிறுவர்கள் முதலுதவியுடன் வீடு திரும்பலாம் எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Tsunami roller coaster விளையாட்டின் போது அதன் வேகம் அதிகரிக்க செய்வார்கள் இது 40mph வரை இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் அதன் சக்கரங்கள் கழண்டு விழுந்ததில் இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த விளையாட்டில் பொதுவாக அதிக கூச்சல் இட்டுக்கொண்டே மக்கள் ரசிப்பார்கள், இதனால் விபத்தின்போதும் மக்கள் கூச்சல் இட்டதை சிறிது நேரம் எவரும் பொருட்படுத்தவில்லை என கூறப்படுகிறது.
இந்த தீம் பார்க்கில் இதுபோன்ற விபத்து நேர்வது முதன்முறையல்ல என கூறப்படுகிறது. கடந்த 2011ம் ஆண்டு சிறுவர்கள் உள்ளிட்ட 9 பேர் இந்த விளையாட்டு எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 8 மணி நேரம் தொடர்ந்து 60 அடி உயரத்தில் தொங்கியபடியே இருந்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் இதேப்போன்று Tornado roller coaster என்ற விளையாட்டில் 8 பேர் 20 அடி உயரத்தில் சிக்குண்டனர்.