அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மெர்சல்’ படம், டிரைலர் இல்லாமல் நேரடியாக படம் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மெர்சல்’. இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடித்துள்ளார்கள். மேலும், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தை அட்லி இயக்கியுள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தின் டீசர் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் யூடியூப்பில் அதிக பார்வையாளர்களையும், அதிக லைக்குகளையும் பெற்று சாதனை படைத்து வருகிறது. அதேபோன்று இன்னொரு உலக சாதனை செய்ய காத்திருப்பதாகவும், அதற்காக டிரைலரை வெளியிடுங்கள் என்றும் விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் படக்குழுவினர்களுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
மெர்சல் ட்ரெய்லர் தயார் நிலையில் உள்ளது என நேற்று தகவல்கள் வெளியாகின. ஆனால் இன்று, படக்குழுவினர்கள் ‘மெர்சல்’ படத்தின் டிரைலர் வெளியிடும் திட்டம் இல்லை என்று தெரிவித்துவிட்டனர். இது விஜய் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ‘மெர்சல்’ படம் வெளியாக ஒரே ஒரு வாரம் மட்டும் இருப்பதால் மீதியுள்ள போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் இரவுபகலாக நடைபெற்று வருவதாகவும், டிரைலர் உருவாக்க தற்போது நேரம் இல்லை என்றும் கூறப்படுகிறது.
ஆனால் அதேநேரத்தில் இந்த படத்தின் புரமோ வீடியோ அல்லது ஸ்டில்கள் தீபாவளி வரை தினமும் வெளிவரும் என்று படக்குழுவினர் உறுதியளித்துள்ளனர். இதனால் டிரைலர் இல்லாமல் ஏமாற்றமடைந்த விஜய் ரசிகர்களுக்கு இந்த செய்தி ஒரு ஆறுதலாக உள்ளது.