மெர்சல் படம் தொடர்பாக ஆதரவு தந்த அனைவருக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளார் நடிகர் விஜய்.
விஜய் – அட்லீ கூட்டணியில், தேனாண்டாள் பிலிம்ஸின் 100வது படமாக, தீபாவளிக்கு வெளியான படம் மெர்சல். இப்படம் ரிலீஸாகும் முன்பே தலைப்பு மற்றும் சென்சார் பிரச்னைகளை சந்தித்தது. அவைகள் தீர்க்கப்பட்டு படம் வெளியான பிறகு, படத்தில் ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பு நீக்கம் தொடர்பான காட்சிகள் இருப்பதாக கூறி பா.ஜ., எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கு திரையுலகினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். தேசிய அளவில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் கூட மெர்சல் படத்திற்கு தனது ஆதரவை தெரிவித்தார்.
பா.ஜ., செய்த எதிர்ப்பால் மெர்சல் படத்திற்கு எதிர்பாராத விதமாக மாபெரும் பப்ளிசிட்டி கிடைத்தது. இதனால் ஏற்கனவே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற மெர்சல், மேலும் வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது.
இந்நிலையில் மெர்சல் படம் தொடர்பாக ஆதரவளித்த அனைவருக்கும் விஜய் நன்றி தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள நன்றி கடிதத்தில் கூறியிருப்பதாவது…
மெர்சல் படம் தீபாவளி விருந்தாக வெளியாகி மக்களின் பாராட்டுகளுடன் நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றி படமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மெர்சல் படத்திற்கு சில எதிர்ப்புகள் வந்தன. இதற்கு என் கலையுலகை சேர்ந்த நண்பர்களான நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், திரையுலக அமைப்புகளான தென்னிந்திய நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தேசிய அளவில் பிரபலமான அரசியல் தலைவர்கள், மாநில கட்சிகளின் தலைவர்கள், கட்சி பிரதிநிதிகள், பத்திரிகை மற்றும் இணையதள ஊடக நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும், எனக்கும், மெர்சல் படக்குழுவுக்கு ஆதரவு தந்தார்கள்.
மெர்சல் படத்தை மாபெரும் வெற்றி பெற செய்ததற்கும், ஆதரவு கொடுத்ததற்கும் இந்த தருணத்தில் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு விஜய் தெரிவித்துள்ளார்.