மானை சுடுவதாக நினைத்து பெண்மணி ஒருவரை சுட்ட சம்பவம் ஒன்று வடக்கு Aveyron இல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான பெண்மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்
ஒக்டோபர் 14, சனிக்கிழமை, வடக்கு Aveyron இன் Taussac எனும் சிறு கிராமத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நண்பகலின் பின்னர், 2.20 மணி அளவில், மான் வரவுக்காக துப்பாக்கியுடன் காத்திருந்த நபர், மானை பார்த்ததும் துப்பாக்கியால் சுட்டுள்ளார். ஆனால் வேட்டைக்காரர் சுட்டது மானையல்ல. மாறாக 60 வயதுடைய பெண்மணி ஒருவரை. குறித்த பெண்மணி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
குறித்த 47 வயதுடைய வேட்டைக்காரரை காவல்துறையினர் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர். கடந்த 2016 ஆம் ஆண்டில் மாத்திரம், வேட்டையின் போது 143 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பதிவாகியுள்ளது. இதில் 18 பேர் கொல்லப்பட்டிருந்தனர். இந்த தகவலை வேட்டை மற்றும் வனவிலங்குகளுக்கான தேசிய அலுவலகம் (l’Office national de la chasse et de la faune sauvage) வெளியிட்டுள்ளது.