மட்டக்களப்பு வாழைச்சேனை கல்குடா வீதியில் சனிக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் சம்பவத்தில் காயமுற்ற இருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
கிண்ணையடி வாழைச்சேனையைச் சேர்ந்த செல்வகுமார் புவிதன் வயது (18) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
விபத்தில் காயமுற்றவர்களான சுங்காங்கேணி வாழைச்சேனையைச் சேர்ந்த யோ.கிருசாந்தன் மற்றும் பிறைந்துறைச்சேனை வாழைச்சேனையைச் சேர்ந்த எம்.நவாஸ் ஆகியோர்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
கல்குடாவில் இருந்து வாழைச்சேனை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் தங்கள் முன்னால் மீன் ஏற்றிச் சென்ற மோட்டார் சைக்கிளை வீதியினை குறுக்கே கடந்து செல்ல முற்பட்ட வேளை இரண்டு மோட்டார் சைக்கிள்களும் ஒன்றுடன் ஒன்று மோதியதினால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த விபத்து தொடர்பாக வாழைச்சேனை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.