இந்தோனேசியாவைச் சேர்ந்த ஆர்டி ரிஸல் எனும் இந்த 2 வயதுச் சிறுவன் திடீரென ஊடகங்களில் பரபரப்புச் செய்தியானான். எதற்கென்று தெரியுமா? 2 வயது என்பதே குழந்தைப் பருவம் தான், அந்த அறியாக் குழந்தைப் பருவத்தில் இந்தச் சிறுவன் நாளொன்றுக்கு 40 சிகரெட் வரை தொடர்ந்து அசால்ட்டாக ஊதித் தள்ளிக் கொண்டிருந்தான். இந்த சிகரெட் கணக்குகள் கூட தோராயமாக அவனது பெற்றோர் சொன்ன அளவீடுகளே! அந்த அளவுக்கு சிகரெட் மீது அவனுக்கு அளவில்லாத மோகம் இருந்தது. சிகரெட் பழக்கம் மட்டுமல்ல ரிஸலுக்கு அளவில்லாமல் அபிரிமிதமாகச் சாப்பிடும் வழக்கமும் இருந்திருக்கிறது. இதனால் உடல்பருமனாலும் தொடர்ந்து அவதிப்பட்டுக் கொண்டிருந்திருக்கிறான்.
பின்னர், ஊடகங்களில் வெளியான அவனது கதை பலரது கோபங்களைத் தூண்டியது, அந்தக் கோபம்… இந்தோனேசிய அரசை குழந்தை பருவப் புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை எடுக்கத் தூண்டியது. அதைத் தொடர்ந்து ரிஸலுக்கு புகைபிடிக்கும் பழக்கத்திற்காக சிகிச்சையும் அளிக்கப்பட்டது. புகைப்பழக்கத்துக்கு அடிமையாகும் போது ஆர்டிக்கு 2 வயது தான் ஆகியிருந்தது. புகை அடிமைப் பழக்கத்திலிருந்து அவனை மீட்டுக் கொண்டு வர மறுமலர்ச்சி நிலையத்துக்கு அனுப்பப்பட்டான். அங்கிருந்து தற்போது தனது புகை அடிமைத்தனத்திலிருந்து மீண்டிருக்கும் ஆர்டிக்கு இப்போது 8 வயதாகிறது. ஆனாலும் குழந்தைப் பருவத்திலிருந்து பழக்கமாகி விட்ட ஒரு அடிமைத்தனத்திலிருந்து மீள்வதென்பது அவனுக்கு அத்தனை எளிதான விஷயமாக இல்லை.
அப்படித்தான் புகைப்பழக்கத்திலிருந்து மீள்வதற்கு முயற்சித்து கடைசியில் ஆர்டி, தொடர்ந்து இடைவிடாமல் உண்ணும் பழக்கத்துக்கு அடிமையாகி விட்டான். இது எல்லோருடைய வாழ்க்கையிலுமே நிகழக்கூடிய ஒரு சோகம் தான். ஒரு அடிமைத்தனத்திலிருந்து விடுபட நினைத்து பிறிதொன்றில் மாட்டிக் கொள்வதை எப்படி மீட்சி என்று கருத முடியும். அதனால் ஆர்டியின் பெற்றோர் கவலையில் ஆழ்ந்தனர்.
ஆர்டியின் அம்மா டயானேவின் கூற்றுப்படி, இப்போது யாரேனும் ஆர்டியிடம் புகைப்பதற்கு சிகரெட்டுகள் வழங்கினார்கள் எனில், அவர்களிடம் ஆர்டி சொல்லும் பதில்; ஐ லவ் காக் செடொ (ஆர்டியின் மனநலவியல் மருத்துவர்களில் ஒருவர்) நான் புகைத்தால் அவர் மிகவும் மனம் வருந்துவார் என்பதோடு என்னை நானே சுகவீனனாகவும் ஆக்கிக் கொண்டவனாவேன்.’ அதனால் எனக்கு சிக்ரெட்டுகள் எப்போதுமே வேண்டவே வேண்டாம் என்கிறானாம். ஆர்டியைப் பொருத்தவரை இது மிக நல்ல முன்னேற்றம் தான்!
தற்போது தனது அளவில்லாமல் உண்ணும் பழக்கத்துக்காகவும் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வரும் ஆர்டி. கூடிய விரைவில் அந்த அடிமைத்தனத்திலிருந்தும் விடுபட்டு விடுவான் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் ஆர்டியின் அம்மா!
அன்று ஒபிசிட்டியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த ஆர்டியின் இன்றைய தோற்றம் இது தான்.