வடக்கு மாகாணத்தில் உள்ள பல துயிலும் இல்லங்களில் தமது பிள்ளைகளின் கல்லறைகளை உழுது தள்ளிய இராணுவம் அதன்மேல் சப்பாத்துக்கால்களால் மிதித்து திரிவது பெற்றவர்களின் நெஞ்சில் மிதிப்பது போன்றுள்ளது. இப்படி அவர்கள் நடந்துகொள்வதால் மாவீரர்களைப் பெற்றவர்களின் உள்ளங்கள் வதங்குகின்றன என்று பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே இதற்கு மாற்று ஏற்பாட்டை மேற்கொண்டு உண்மையான நல்லிணக்கத்துக்கு வழி ஏற்படுத்துங்கள்.
இவ்வாறு வடக்கு மாகாண சபை உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா மாவட்டக் கிளைத் தலைவருமான வைத்தியக் கலாநிதி ப.சத்தியலிங்கம் அரச தலைவரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
வவுனியா மாவட்டத்தில் இடம்பெற்ற நடமாடும் சேவைக்கு வருகை தந்த அரச தலைவருடன் சுமார் 30 நிமிடங்கள் கலந்துரையாடினேன்.
அதன்போது பல கோரிக்கைகளை முன்வைத்திருந்த தாக சத்தியலிங்கம் தெரிவித்தார்.
அதில் துயிலும் இல்லம் தொடர்பான கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. அதன்போது,
வடக்கு மாகாணத்திலே விடுதலைப் புலிகளின் காலத்தில் பேணப்பட்ட பல துயிலுமில்லங்கள் வெளியான பிரதேசங்க ளில் உள்ளன.
மற்றும் சில படையினரின் பிடியில் உள்ளன. அவ்வாறு படையினர் பிடியில் உள்ள துயிலுமில்லங்க ளில் தமது பிள்ளைகளின் கல்லறைகளை உழுது தள்ளிய இராணுவம் அதன்மேல் சப்பாத்துக்கால்களால் மிதித்து திரிவத னைப் பெற்றவர்களால் பொறுக்கமுடியவில்லை.
இது இராணுவத்தினர் தமது நெஞ்சில் மிதிப்பது போன்ற உணர்வையே அனுபவித்து வேதனைப்படுவதாக மாவீரர்களின் பெற்றோர் முறையிடுகின்றனர்.
இது தொடர்பில் பலரும் எமக்கு முறையிட்டவாறு உள்ளனர்.
எனவே இதற்கு மாற்று ஏற்பாடு மேற்கொள்ளவேண்டும்.
துயிலுமில்லங்க ளைப் பார்த்துத் தமது நெஞ்சில் சிறிதளவேனும் ஆறுதல் அடைய வழி ஏற்படுத்துமாறு கோருகின்றனர்.
அவ்வாறான செயல்களின் மூலமே உண்மையான நல்லிணக்கத்துக்கு வழி ஏற்பட முடியும் என்ற அவர்களின் கூற்றுக்கு அரசு செவிசாய்க்கவேண்டும்.
அரசைப் பொறுத்தவரையில் அங்கே விதைக்கப்பட்டவர்கள் புலிகள்.
ஆனால் தமிழர்களைப் பொறுத்த மட்டில் அவர்கள்தமது பிள்ளைகள், உறவுகள். அவர்களை தமிழர்கள் தெய்வங்களாகவே கருதுகின்றனர்.
இறந்தவர்கள் எவராயினும் இறப்பின் பின்னர் மரியாதையை வழங்குவதே பன்னாட்டு விழுமியம்.
அதனை எமது நாட்டு அரசும் காண்பிக்க முன்வர வேண்டும் – என்று கோரிக்கை விடுத்தேன்.
குறித்த விடயம் தொடர்பில் கோரிக்கை மனு ஒன்றை எழுத்தில் சமர்ப்பியுங்கள்.
அவை தொடர்பில் ஆராய்ந்து உரிய ஏற்பாடுகளின் பிரகாரம் நடவடிக்கை எடுப்பதாக அரச தலைவர் தெரிவித்தார் என்று சத்தியலிங்கம் தெரிவித்தார்.