கடந்த ஆண்டுகளை விட தற்பொழுது டெங்கு நோயினால் மரணம் அதிகரிப்பதற்கு தேர்தல் நடத்தப்படாமல், உள்ளாட்சி அமைப்புக்கள் முடக்கப்பட்டிருப்பது ஒரு காரணம் என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
டெங்கு காய்ச்சலை தடுக்க தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, தமிழகம் முழுவதும் எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக, நேற்று அவர் வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசுக்கும் பங்கு இருக்கிறது. கொள்ளைநோய் சட்டம் அதற்கு வழி செய்கிறது. ஆனால் பா.ஜ.க.வின் முன்னணித் தலைவர்கள், மாநில அரசை மட்டும் குறை கூறி வருகின்றனர். நாளுக்கு நாள் மக்கள் உயிரிழக்கும் நிலையில், டெங்குவிலும் அரசியல் ஆதாயம் தேடும் அவர்களது செயல் வேதனையளிக்கிறது. எனவே எதிர்வரம் 11 அம் திகதி முதல் போராட்டம் நடத்தவுள்ளோம்.’ என திருமாவளவன் தனது ஊடக அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.