ஜூலை 29-ம் தேதி வெளியாகிறதா ‘கபாலி’? – வெளிநாட்டு விளம்பரத்தால் குழப்பம்
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கபாலி’. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தை தாணு தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. வெளிநாட்டு விநியோகஸ்தர்கள் அனைவருக்கும் ஜூலை 15-ம் தேதி வெளியாகும் என அறிவித்திருக்கிறார்கள். ஏனென்றால், வெளிநாட்டிலும் படத்தை சென்சார் பண்ணுவார்கள் என்பதால் அங்கு தான் முதலில் அனுப்பி வைப்பார்கள்.
இதனிடையே ஜூலை 15-ம் தேதி அல்ல, ஜூலை 22-ம் தேதி வெளியீடு என்று வெளிநாடு விநியோகஸ்தர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், வெளிநாட்டில் வைக்கப்பட்டு இருக்கும் ‘கபாலி’ விளம்பரத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
அதில் அனைத்திலுமே ஜூலை 29-ம் தேதி உலகமெங்கும் வெளியீடு என்று இடம்பெற்று இருக்கிறது. இதனால் ‘கபாலி’ வெளியீடு தேதி குறித்து மேலும் குழப்பம் நீடித்து வருகிறது. ஆனால், ‘கபாலி’ படக்குழுவோ படத்தின் தணிக்கை பணிகள் முடிவடைந்த உடன் தான் வெளியீட்டு தேதியை அதிகாரபூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள்.