முரளீதரன் பந்து வீச்சை ‘த்ரோ’ என்று கூறி ‘நோ-பால்’ கொடுத்து விமர்சனத்திற்கு உள்ளான அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் நடுவர் டேரல் ஹேயர் திருட்டு வழக்கில் தண்டனை பெற்றுள்ளார்.
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் ஐ.சி.சி. கிரிக்கெட் நடுவர் டேரல் ஹேயர். 65 வயதாகும் இவர் 1992 முதல் 2008 வரை 78 டெஸ்ட் போட்டிகளில் நடுவராக பணியாற்றியுள்ளார்.
இங்கிலாந்து – இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி 1995-ம் ஆண்டு நடைபெறும்போது முத்தையா முரளீதரன் பந்து வீச்சை ‘த்ரோ’ என்று அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் ‘நோ-பால் என்று அறிவித்து பெரும் சர்ச்சைக்குள்ளானார். அதன்பின் மன்னிப்புக் கடிதம் கொடுத்ததை தொடர்ந்து நடுவராக பணியாற்றினார்.
அதேபோல் 2006-ம் ஆண்டு இங்கிலாந்து ஓவலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் வீரர்கள் பந்தை சேதப்படுத்தியதாக கூறி பாகிஸ்தான் அணிக்கு தடைவிதித்தார்.
இதனால் சர்ச்சைக்குரிய நடுவர் என்று பெயர்பெற்றார். தனது நடுவர் பணிக்காலம் முடிவடைந்த பின்னர் ஒரு மதுபானக்கடையில் வேலை செய்தார்.
அந்தக் கடையில் வேலைப்பார்த்த போது பணத்தை திருடியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த குற்றத்தை டேரல் ஹேயர் ஒப்புக் கொண்டார். இதனால் அவருக்கு 18 மாத கால நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் வழங்கும்படி அவுஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்மூலம் அவர் 18 மாதங்கள் எந்த குற்றங்களிலும் ஈடுபடாமல் நீதிமன்றம் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வெளியில் சுதந்திரமாக வாழலாம் எனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.