எதிர்வரும் காலங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை காத்தான்குடியிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் மேலும் பலப்படுத்தி வளர்ச்சிப்பாதையில் இட்டுச் செல்வது தொடர்பாகவும்,எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை மையப்படுத்தி மேற்கொள்ளப்படவேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் ஆராயும் விரிவான கலந்துரையாடலொன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் காத்தான்குடி அமைப்பாளரும்,கட்சியின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீன் அவர்களின் இல்லத்தில் நேற்று (16.10.2017) இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும்,ஸ்ரீலங்கா ஷிபா பௌண்டேஷனின் தலைவரும்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக் உற்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.இதன்போது ஒரே அணியாக பயணித்து கட்சியை மேலும் பலமடையச் செய்து வளர்ச்சிக்கு இட்டுச்செல்லுதல் தொடர்பாகவும் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் காத்தான்குடி நகரசபையின் ஆட்சியை கைப்பற்றுவதனை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டதோடு இவ்விடயங்கள் தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கட்சியினுடைய ஆதரவாளர்களை தெளிவுபடுத்தும் கூட்டமொன்றை ஒழுங்குபடுத்துவது எனவும் ,எதிர்காலத்தில் எவ்வித பிரிவுகளுமின்றி கட்சி ஓரணியாக பயணிக்கும் என்பதோடு கட்சி புணரமைப்பு பணிகளை இருவரும் இணைந்து விரைவில் ஆரம்பிப்பது என்ற முடிவும் எட்டப்பட்டது.