கடந்த வெள்ளியன்று மலையாளத்தில் ஜெயராம் நடித்த ‘ஆகாச மிட்டாய்’ படம் வெளியானது. சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியாகி ஹிட்டான அப்பா படத்தின் ரீமேக் தான் இது. மலையாளத்திலும் சமுத்திரக்கனியே இந்தப்படத்தை இயக்கியுள்ளார். ஆனால் கடந்த வாரம் மெர்சல் படம் வெளியானதால் ‘ஆகாச மிட்டாயி’ படத்திற்கு எதிர்பார்த்த அளவு தியேட்டர்களும் கிடைக்கவில்லை.
மெர்சலின் தாக்கத்தால் வரவேற்பும் கிடைக்கவில்லை.. இதனை தொடர்ந்து ஜெயராமின் மகன் காளிதாஸ், நல்ல சமூக பொறுப்புள்ள படங்களை மக்கள் கைவிட்டுவிடக்கூடாது எனது பேஸ்புக்கில் கோரிக்கை வைத்துள்ளார்.
‘ஆகாச மிட்டாயி’ படத்தின் பப்ளிசிட்டி ரொம்பவே பலவீனமாக இருந்தது தான் இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. அதேசமயம் தமிழில் ‘அப்பா’ படம் வெளியாவதற்கு முன்பாக அதன் பப்ளிசிட்டியில் சமுத்திரக்கனி மிரட்டினார். திரையுலகில் உள்ள முக்கால்வாசி பிரபலங்களை தங்களது அப்பா குறித்து பேசவைத்து அவற்றை தினசரி ஒரு வீடியோவாக வெளியிட்டார்.
அதனால் தான் எந்தவொரு நட்சத்திர அந்தஸ்தும் இல்லாமல் ஐந்தாறு குழந்தைகளை மையப்படுத்தி கடந்த ஜூலை-1ல் வெளியான ‘அப்பா’, ‘ஜூலை-22ல் வெளியான ‘கபாலி’ பட அலையிலும் தப்பி, சத்தமில்லாமல் தொடர்ந்து 50 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. ஆனால் ‘ஆகாச மிட்டாயி’யாக மாறி கேரளாவில் இன்னொரு தமிழ்ப்படமான மெர்சல்’ சுழலில் சிக்கியது ஆச்சர்யத்தையே தருகிறது.