கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக் கூட்டு எச்சங்கள்: விசாரணைகள் தீவிரம்
மனிடோபாவில் உள்ள சிவப்பு ஆற்றின் (Red River) கரைகளில் கடந்த சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக் கூட்டின் எச்சங்கள் தொடர்பில், ரோயல் கனேடியன் மௌன்டட் பொலிஸார் (RCMP) தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.00 மணியளவில் 212 நெடுஞ்சாலைக்கும் 204 நெடுஞ்சாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள சிவப்பு ஆற்றின் கரையோரமாக மனித உடற்பாகங்கள் காணப்படுவதாக முறைப்பாடு கிடைக்கப் பெற்றது. இதன் அடிப்படையில் ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் அவற்றை சேகரித்தனர்.
இது தொடர்பில் நேற்று (திங்கட் கிழமை) அறிக்கை வெளியிட்ட RCMP, கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக் கூட்டின் எச்சங்கள், பல தசாப்தங்களுக்கு முன்னர் வாழ்ந்த மனிதனுடையது என சந்தேகிக்கப்படுவதாகவும், இதனால் அவை கால பகுப்பாய்வின் பொருட்டு மனிடோபா வரலாற்று வள ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த எலும்புக் கூட்டு எச்சங்களை ஆய்வுக்கு உட்படுத்தியதன் மூலம் கிடைக்கப் பெற்ற ஆரம்ப கட்ட அறிக்கையில், ‘இதுவரை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் வாயிலாக குறித்த எலும்புக் கூட்டின் காலப்பகுதியை கணிக்க முடியவில்லை. அதற்கு மேலதிக ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். ஆனால் குறித்த எலும்புக் கூட்டு பாகங்கள் 50 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த ஒருவருடையதாக இருக்கும் வாய்ப்பு உள்ளது. விசாரணைகள் நிறைவுக்கு வந்ததன் பின்னரே, இது தொடர்பான முழுமையான விபரங்கள் வெளியிடப்படும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.