அணு ஆயுத ஏவுகணைகளால் அமெரிக்காவை தாக்கக்கூடிய திறனை அடைகின்ற நிலையில் வட கொரியா உள்ளது என்று அமெரிக்க உளவுத்துறையின் (சிஐஏ) தலைவர் மைக் பாம்பேயோ தெரிவித்திருக்கிறார்.
இந்தப் பிரச்சனையை கையாள அமெரிக்கா, ராஜதந்திர வழிமுறைகளை மற்றும் தடைகளை இன்னும் விரும்புவதைக் குறிப்பிட்ட அவர், ராணுவ ஆற்றலை பயன்படுத்துவதும் இன்னொரு தெரிவாக உள்ளது என்று கூறியுள்ளார்.
அணு ஆயுதங்களை கொண்டு அமெரிக்காவை தாக்கக்டிய வலிமையை தாங்கள் ஏற்கெனவே பெற்றுவிட்டதாக வட கொரியா தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் விடுவிக்கப்பட்ட அமெரிக்க கனடிய பணயக் கைதிகள், ஆப்கானிஸ்தானில் பிடிக்கப்பட்டிருந்தார்கள் என்று முன்னதாக கருதப்பட்டது. உண்மையில், அவர்கள் பாகிஸ்தானில் அவர்கள் அடைக்கப்பட்டிருந்தனர் என்றும் மைக் பாம்பேயோ கூறியுள்ளார்.
கனடாவை சேர்ந்த ஜோசுவா போயில் மற்றும் அவருடைய அமெரிக்க மனைவியான கெய்ட்லான் கோல்மேன் “பாகிஸ்தானில் 5 ஆண்டுகள் அடைக்கப்பட்டிருந்தனர்” என்று அவர் கூறினார்.
இந்தக் கூற்று பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்ததற்கு முரணான கருத்தாகும்.
முன்னதாக, இந்த தம்பதியர் ஆப்கானிஸ்தானில் பிடித்து வைக்கப்பட்டு , அக்டோபர் 11 ஆம் தேதி பாகிஸ்தானின் குர்ராம் பழங்குடியின மாவட்டத்தின் எல்லைக்குள் அனுப்பப்பட்டனர் என்று பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
சாதனையை அடையும் நிலையில் வட கொரியா
வட கொரியா தங்களுடைய அணு ஆயுத திறன்களில் தற்போது போதுமான அளவுக்கு மிக நெருங்கி வந்துள்ளனர். எனவே, அமெரிக்கா கொள்கைக் கண்ணோட்டத்தில் இருந்து அணுகுவதில் இருந்து, வட கொரியா சாதித்து விட்டதை போல எண்ணி செயல்பட தொடங்க வேண்டும் என்று பாம்பேயே தெரிவித்திருக்கிறார்,
‘டிபென்ஸ் ஆப் டெமாக்கிரசீஸ்’ என்கிற ஒரு கன்சர்வேட்டிவ் ஆலோசனை நிறுவனத்தில் வியாழக்கிழமை அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“அவர்கள் அணு ஆயுதப் பாதையில் மிகவும் முன்னேறி வந்துள்ளனர். அதன் இறுதி நிலையை தடுப்பது எப்படி என்பதுதான் தற்போதைய விடயம்” என்றார் பாம்பேயோ.
வட கொரியாவின் ஏவுகணை வல்லுநர்கள் தற்போது மிக விரைவாக முன்னேற்றம் கண்டு வருகின்றனர். அந்நாடு இந்த சாதனையை எப்போது நிறைவு செய்யும் என்பதை அமெரிக்க உளவுத்துறை தெளிவாக அறிவது கடினமாக உள்ளது என்று அவர் எச்சரித்திருக்கிறார்.
“நம்முடைய திறன்களை புரிந்து கொள்வதில் பல மாதங்கள் இப்போது பேசிக்கொண்டிருப்பதுபோல, வட கொரியாவின் நிலைமைகளை மிகவும் விபரமாக அறிய வருவது நம்மால் முடியாமல் போகிறது” என்று அவர் கூறியுள்ளார்.
வட கொரியாவுடன் இருக்கும் மோதல் போக்கிற்கு ராஜதந்திரம் மூலம் தீர்வு காண விரும்புவதாக அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் விரும்புவதாக, கடந்த வார இறுதியில் அமெரிக்க உள்துறை செயலர் டில்லர்சலும் வலியுறுத்தியுள்ளார்.
வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நேரத்தை வீணாக செலவிட வேண்டாம் என்று டில்லர்சனிடம் வெளிப்படையாக டிரம்ப் கூறிய பின்னர் இந்த அறிக்கை வந்துள்ளது.
பணயக்கைதி சர்ச்சை
பணயக்கைதிகளாக இருந்து கடந்த வாரம் விடுவிக்கப்பட்டுள்ள ஜோசுவா போயில் மற்றும் கெய்ட்லான் கோல்மேன் தம்பதி பற்றியும் சிஐஏ இயக்குநர் தன்னுடைய உரையில் குறிப்பிட்டிருந்தார்.
2012 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு சுற்றுலா சென்றிருந்தபோது அவர்கள் கடத்தப்பட்டனர். பயணக்கைதிகளாக இருந்தபோது மூன்று குழந்தைகளை அவர்கள் பெற்றெடுத்துள்ளனர்..
ஆப்கானிஸ்தானில் தாலிபன்களால் பிடித்து வைக்கப்பட்டு, சமீபத்தில் பாகிஸ்தானின் குர்ராம் பழங்குடியின மாவட்டத்தின் எல்லைக்குள் அனுப்பப்பட்டனர் என்று பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்திருந்ததற்கு மாறாக, இந்த தம்பதியர் பாகிஸ்தானில் பிடித்து வைக்கப்பட்டிருந்தனர் என்று பாம்பேயோ கூறியிருக்கிறார்.
பாம்பேயோயின் இந்த கூற்று, பாகிஸ்தானின் உளவு சேவையால் எப்போதும் ஆதரவு அளிக்கப்பட்டு வருகின்ற ஆயுதக்குழுக்களால்தான் பணயக்கைதிகள் பிடித்து வைக்கப்படுகின்றனர் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறிவருவதாக, தகவல் தெரிவிப்பவரின் பெயர்களை குறிப்பிடாமல் அமெரிக்க ஊடகங்கள் வெளியிடுகின்ற தகவல்களை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.
பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வரும் உளவுத்துறையின் ஆதரவோடு செயல்பட்டு வருகின்ற ஹக்கானி ஆயுதப்படை, தாலிபன் அமைப்பின் மிக நெருங்கிதொரு கூட்டாளியாக கருதப்படுகிறது.
“இஸ்லாமியவாத கடும்போக்கிற்கு எதிரான போராட்டத்தில அமெரிக்காவுக்கு உதவுவதற்கு பாகிஸ்தான் விரும்புகிறது என்கிற எதிர்பார்ப்பு மிகவும் குறைவான நிலையில் வைக்கப்பட வேண்டும் என்பதை வரலாறு சுட்டிக்காட்டும் என்று நான் எண்ணுகிறேன். எமது உளவுத்துறை இதையே சுட்டிக்காட்டுகிறது” என்று பாம்பேயோ கூறியிருக்கிறார்.